‘இபிஎஸ், ஓபிஎஸ்சை பிரதமர் சந்தித்தால் நல்லது நடக்கும்’ பாஜ வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே: மாஜி அமைச்சர் மாபா பேட்டியால் அதிமுகவினர் அப்செட்

காரியாபட்டி: பாஜ வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. சென்னை வரும் பிரதமர், தோழமைக் கட்சி தலைவர் என்ற முறையில் இபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திப்பது அவரின் உரிமை. அதில் நல்லது நடக்கும் என நம்புகிறேன் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், அளித்த பேட்டி: அதிமுகவின் ஒற்றைத் தலைமையின் பலம் டெல்லி வரை தெரிந்துள்ளது. சென்னை வரும் பிரதமர், தோழமைக் கட்சி தலைவர் என்ற முறையில் இபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திப்பது அவரின் உரிமை. அதில் நல்லது நடக்கும் என நம்புகிறேன். பாஜ எங்களின் தோழமைக் கட்சி. அவர்கள் செயல்பாடு நன்றாக உள்ளது. தோழமைக் கட்சி வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. அதைப்பற்றி எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பாஜவின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா இருந்த போது தனித்து நின்று 136 இடங்களை வென்று ஆட்சி அமைத்தார்களோ, அதேபோல எங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜவின் வளர்ச்சி அதிமுகவை அழிக்கும் என அடிமட்ட தொண்டர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனின் பேட்டி, அங்கிருந்த அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது.

* ஆளுங்கட்சிக்கு அடுத்த இடம் எங்களுக்குத்தான்: பாஜவுக்கு செல்லூர் ராஜூ பதிலடி

மதுரை: மதுரை முனிச்சாலையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை வகித்தார். அவர் பேசும்போது, ‘‘அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் இந்த ஆர்ப்பாட்டம். ஆளுங்கட்சியான திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் இரண்டாம் இடம் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும். இதனை யார் புரிய வேண்டுமோ அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Stories: