பசுமையை காக்க தேவரியம்பாக்கம் ஊராட்சியில் குறுங்காடு: 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது தேவரியம்பாக்கம் ஊராட்சி. இங்கு 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், கால்நடை மருந்தகம், இ சேவை மையம், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் இந்த ஊராட்சியை சுற்றிலும் 50 ஏக்கருக்கும் மேல் அரசுக்கு சொந்தமான காலி இடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களில் பசுமையை காக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகம் குறுங்காடு வளர்க்க முன்வந்து சுற்றுச்சூழல் தினத்தன்று மரங்களை நட துவங்கினர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 15 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்து அதில் பழ வகை மரங்கள், நிழல் தரும் மரங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வகையான 12 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்யப்பட்டு அதனை பராமரிக்கும் பணியிலும் கிராம மக்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 50 ஏக்கருக்கும் மேல் அரசு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் வரும் காலங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் சென்று விடாமல் இருக்க குறுங்காடு வளர்க்க திட்டமிட்டு அதனை செயல்படுத்தவும் தொடங்கி உள்ளோம். இதற்காக கல்குவாரிகளின் குட்டையில் உள்ள தண்ணீரை சூரிய மின்சக்தி மூலம் இயக்கி சொட்டு நீர் பாசனம் போல் அனைத்து மரக்கன்றுகளுக்கும் நீர் சென்றடையும் வகையில் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்குள் இந்த குறுங்காடு முழுமையாக வளர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் உள்ள காலி இடங்களை இதுபோன்று மரக்கன்றுகள் நடவு செய்து பசுமையை போற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்து வந்த நிலையில் இந்த முயற்சியை எங்கள் ஊராட்சியில் முதற்கட்டமாக மேற்கொண்டுள்ளோம். மேலும் ஊராட்சியில் எங்கெங்கெல்லாம் காலி இடங்கள் உள்ளதோ அங்கெல்லாம் பசுமையை போற்றும் வகையில் எங்கள் ஊராட்சி முன் உதாரணமாக செயல்படும் என்றார். மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இவர்கள் செயல்படுத்தும் இந்த பசுமை திட்டத்தை மேலும் மாவட்ட முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் இதனை மேம்படுத்த வேண்டும் எனவும் பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: