இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு விசா இல்லாமல் 60 நாட்டுக்கு செல்லலாம்!: தரவரிசை பட்டியலில் 87வது இடம் கிடைத்தது

புதுடெல்லி: இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு விசா இல்லாமல் 60 நாட்டுக்கு செல்லலாம் என்றும் தரவரிசை பட்டியலில் இந்தியா 87வது இடத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளுக்கான சர்வதேச பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலை ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்தந்த நாடுகளின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் மற்றும் குறிப்பிட்ட நாட்டிற்குச் சென்று அங்கு விசா எடுக்கலாம் என்ற அடிப்படையில் தரவரிசை பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 199 நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசை பட்டியில் முதல் இடத்தை ஜப்பான் பிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி இந்த இரு நாட்டு பாஸ்போர்ட் கொண்டு 192 நாடுகளுக்குச் செல்லலாம்.

ஜெர்மனி, ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும், முக்கிய நாடுகளான அமெரிக்கா 7வது இடத்திலும், ரஷ்யா 50வது இடத்தையும், சீனா 69வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு 87வது இடம் கிடைத்துள்ளது. மேற்கண்ட தரவரிசையில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில், 60 நாடுகள் உள்ளன. அதன்படி ஓசியானியா நாடுகளில் பட்டியலில் உள்ள 9 நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளின் பட்டியில் உள்ள ஈரான், ஜோர்டான், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளும், ஐரோப்பியா நாடுகளில் அல்பேனியா, செர்பியா நாடுகளும், கரீபியன் பகுதி நாடுகளில் 11 நாடுகளும், ஆசிய கண்டத்தில் பூட்டான், இலங்கை, நேபாளம் உட்பட 10 நாடுகள் என, 60 நாடுகளுக்கு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: