மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு: கட்டுக்கட்டாக ரூ.21 கோடியுடன் அமைச்சர், தமிழ் நடிகை கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக இம்மாநில அமைச்சர் பார்தா சட்டர்ஜியையும், அவருடைய உதவியாளரான பிரபல தமிழ் திரைப்பட நடிகையான அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் அரசு நிதியுதவி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் குரூப்-சி, டி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் நடந்த முறைகேடுகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த முறைகேடு தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் உள்ள அமைச்சர்கள் பார்தா சட்டர்ஜி, பரேஷ் அதிகாரி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். பார்தா சட்டர்ஜி தற்போது தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சராக இருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அவர் கல்வி துறை அமைச்சராக இருந்தார். இந்த காலக் கட்டத்தில்தான் ஆசிரியர் நியமன  முறைகேடு, ஊழல் நடந்துள்ளதால் அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரிடம் 26 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு அவர் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்தனர். மேலும், அவரது பெண் உதவியாளரும், தமிழ் திரைப்பட நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாட்டர்ஜியிடம் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் பார்தா சட்டர்ஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

இது தொடர்பாக இம்மாநில பாஜ மாநில தலைவர் சுகந்தா மஜூம்தர் கூறுகையில், ‘அமைச்சர் சட்டர்ஜியின் கைதானது, திரிணாமுல் தலைவர்களால் பயிற்சி செய்யப்படும்  மேற்கு வங்க வளர்ச்சியின் மாதிரியை பிரதிபலிக்கிறது. திரிணாமுல் அமைச்சர்களும், தலைவர்களும் கைது செய்யப்படுவது மேற்கு வங்க வளர்ச்சியின் எடுத்துகாட்டாகும். ரூ.21 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் பதில் அளிக்க வேண்டும்,” என்றார்.

Related Stories: