'Passport Verification'குறித்து நுண்ணறிவுப்பிரிவு மற்றும் மத்தியகுற்றப்பிரிவு காவலர்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

சென்னை: கடவுச்சீட்டு (Passport) ஆவணங்கள் விசாரணை குறித்து சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப்பிரிவு காவலர்கள் மற்றும் மத்தியகுற்றப்பிரிவு காவல் ஆளிநர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர நுண்ணறிவுப்பிரிவு காவலர்கள் மற்றும் மத்தியகுற்றப்பிரிவு காவலர்களுக்கு கடவுச்சீட்டு ஆவணங்கள் சரிபார்ப்பு, (Passport Verification) சட்ட விரோதமாக குடியேறிவர்களை கண்டறிதல், மற்றும் போலி கடவுச்சீட்டுகளை கண்டறிதல் குறித்து 2 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் பேரில் இன்று (21.07.2022) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடந்த சிறப்பு பயிற்சி வகுப்பை, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் மகேஷ்வரி துவக்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் (RPO) கோவேந்தன், வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலர் (FRRO) அருண் சக்தி குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினர்.

இந்த பயிற்சி வகுப்பில் இந்திய குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகள், இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியிருக்கும் சட்டவிரோத புலம் பெயர்ந்தோரை கண்டுபிடித்தல் மற்றும் அவர்களை நாடு கடத்தும் நடைமுறைகள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தல், கடவுச்சீட்டு விண்ணப்பித்தவர்களின் ஆவணங்களை போலீசார் சரிபார்த்து அறிக்கைகள் தயார் செய்யும் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள், காவலர்கள் மற்றும் கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய பதிவுகள், போலி கடவுச்சீட்டுகளை கண்டறிதல், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் கடவுச்சீட்டு சட்டங்கள் குறித்தும் இந்த பயிற்சி வகுப்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது, முதல் நாள் பயிற்சி வகுப்பில் 200 நுண்ணறிவுப்பிரிவு, மத்தியகுற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் மற்றும் மண்டல கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: