பாஜ, அதிமுக தோல்வி நிர்வாகிகள் ‘மொட்டை’

சென்னை: மக்களவை தேர்தலில் பாஜ, அதிமுக தோல்வியால் கட்சி நிர்வாகிகள் மொட்டை போட்டு கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடன்குடி ஒன்றிய பாஜ சார்பில் ஒன்றிய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளராக இருந்தவர் ஜெய்சங்கர். மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார், அவர் தோற்றால் மொட்டை அடித்துக் கொண்டு பரமன்குறிச்சி பஜாரில் வலம் வருவேன் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதிமுகவை சேர்ந்த நண்பர்களிடம் சவால் விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கோவையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் தோல்வியை தழுவினார். இதையடுத்து பாஜ நிர்வாகி ஜெய்சங்கர், நேற்று முன்தினம் பரமன்குறிச்சி பஜாரில் மொட்டையடித்துக் கொண்டு, பஜார் பகுதியை வலம் வந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதேபோல நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் ஆலத்தூர் நாடு முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவரான அதிமுக நிர்வாகி வரதராசு, மொட்டை அடித்துக் கொண்டு விரக்தியில் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டில், அதிமுக படுதோல்வி அடைந்ததால், விரக்தியில் மொட்டை அடிக்கிறேன். இனியாவது அதிமுகவில் பிரிந்துள்ள அணிகள் ஒன்று சேர வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பாஜ, அதிமுக தோல்வி நிர்வாகிகள் ‘மொட்டை’ appeared first on Dinakaran.

Related Stories: