பாலம் துண்டிப்பால் மங்குழி மக்கள் கடும் அவதி-கூடலூர் நகருக்கு 7 கி.மீ. சுற்றி வரும் அவலம்

கூடலூர் : பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்பட்டதால், 2 கி.மீ தூரத்தில் உள்ள கூடலூர் நகரத்துக்கு 7 கி.மீ தூரம் சுற்றி வந்து மங்குழி பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 கூடலூர் நகராட்சிக்கு உட்பட்டது மங்குழி கிராமப்புற சுற்றுவட்டார பகுதி. இந்த பகுதிக்கு கூடலூர்-மைசூர் பிரதான சாலையில் மரப்பாலம் பகுதியில் இருந்து செல்லும் சாலையில் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாலம் வழியாக கூடலூர் நகர் வருவதற்கு சுமார் 2 கி.மீ தூரம் மட்டுமே பயணிக்க வேண்டும்.

இந்த சூழலில் இந்த பாலம் தொடர் மழையால் முழுமையாக சேதம் அடைந்தது. இதனால், மங்குலி சுற்று வட்டாரத்தில் விமலகிரி, ஓடக்கடவு, காரமூலா புத்தூர் கவாலா உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கூடலூர் நகருக்கு சுமார் 7 கி.மீ. தூரம் சுற்றிவர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.மேற்கண்ட கிராம மக்கள் புத்தூர் கவாலா, மார்தோமா நகர் வழியாக கூடலூர் நகருக்கு 7 கிமீ தூரம் சுற்றி வந்தடைகின்றனர். இதனால், காலதாமதமும், சிரமமும் ஏற்படுகிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஆட்டோக்களில் கூடலூர் வர 30 ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தற்போது 120 ரூபாய் செலவு செய்து நகருக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால், கூடுதல் செலவும் ஆகிறது.

எனவே, போர்க்கால அடிப்படையில் பாலம் உடைந்த பகுதியில் தற்காலிக நடைபாதை அமைக்க வேண்டும் எனவும், சேதம் அடைந்த பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 ஆண்டுக்கு முன்பு சேதமடைந்த பாலங்கள்

கூடலூர் பகுதியில், கடந்த 2020ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக நகராட்சிக்கு உட்பட்ட துப்பு குட்டி பேட்டை, கோல்டன் அவென்யூ, புறமனவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாலங்கள் சேதமடைந்தன. இந்த பாலங்களும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் 2 ஆண்டாக சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, இந்த பாலங்களையும் விரைவாக சீரமைக்க கூடலூர் நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: