திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே சதுரங்க ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பிரமாண்ட கோலம்-கலெக்டர் பார்வையிட்டார்

திருவண்ணாமலை : சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வுக்காக, திருண்ணாமலையில் செஸ் போர்டு வடிவிலான பிரமாண்ட கோலத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடக்கிறது. அதில், 187 நாடுகளை சேர்ந்த சதுரங்க வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டியை, வரும் 28ம் தேதி சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

எனவே, சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருவண்ணாமலை மவட்டத்தில் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவையில் இருந்து வரும் 25ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே, ஈசான்ய திடலில் செஸ் போர்டு வடிவிலான ராட்தச கோலம், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நேற்று வரையப்பட்டது. அதனை, கலெக்டர் பா.முருகேஷ் பார்வையிட்டார்.

மேலும், அண்ணா நுழைவு வாயில் எதிரே கிரிவலப்பாதையில் பிரமாண்டமாக வரையப்பட்டுள்ள செஸ் போர்டு கட்டங்களில், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நின்று, ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, திருவண்ணாமலை நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ப.கார்த்தி வேல்மாறன் மற்றும் ஊரக வாழ்வாதார திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: