நீடாமங்கலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்-வருவாய்துறை அதிரடி

நீடாமங்கலம் : நீடாமங்கலம் கீழ ராஜவீதியில் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் குடியிருந்த 2 வீடுகளை வருவாய்துறையினர் அகற்றினர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கீழராஜ வீதியைச் சேர்ந்த நாராயணசாமி மனைவி லீலாவதி, சகாபுதீன் மகள் ஜலீலாபேகம். கூறை வீட்டில் கடந்த 50 ஆண்டுகளாக சாலை புறம்போக்கில் வசித்து வந்தனர். நாராயணசாமி, சாகாபுதீன் இருவரும் பேரூராட்சியில் பில் வசூல் செய்யும் பணி செய்து வந்தனர். இருவருக்கும் நீடாமங்கலம் பேரூராட்சியில் ஒரு தீர்மானம் போட்டு குடியிருக்க இடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள இடத்தில் அருட்செல்வம் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மாடி குடியிருப்பு கட்டியுள்ளார். தான் குடியிருக்கும் வீட்டிற்கு இந்த வீடுகள் இடையூறாக உள்ளது என மாவட்ட நீதிமன்றத்தில் அருள்செல்வன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிமன்றம் இடத்தை காலி செய்ய உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் அருள்செல்வன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி கடந்த ஆண்டு இடத்தை காலி செய்ய சொல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.அந்த உத்தரவை பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றவில்லை. பிறகு உயர்நீதி மன்ற உத்தரவுபடியும் திருவாரூர் கலெக்டர் ஆணைக்கு இணங்க நீடாமங்கலம் தாசில்தார் பரஞ்ஜோதி, நீடாமங்கலம் செயல் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் காவல்துறை வருவாய்துறை, பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் உதவியுடன் சுமார் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் குடியிருந்த வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று மாலை அகற்றப்பட்டது.

Related Stories: