மேல்நல்லாத்தூர் பகுதியில் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் முக்கிய சாலையில் வெளியேற்றம்: சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

திருவள்ளூர்: மேல்நல்லாத்தூர் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலை ரசாயன கழிவுநீர் முக்கிய சாலையில் வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் பொக்லைன் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் 5 வகையான பொக்லைன் இயந்திரங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொழிற்சாலையில் ரசாயன கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை முறைப்படி அகற்றாமல் தொழிற்சாலைக்கு வெளியே மிகப்பெரிய கால்வாய் அமைத்து அதில் வெளியேற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள இந்த தொழிற்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதுமட்டுமல்லாது மேல்நல்லாத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு கல்லூரிக்கு வேலைக்கு செல்பவர்களும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது.தொழிற்சாலை கழிவுகளை முறைப்படி அகற்றாமல் முக்கிய சாலையில் கால்வாய் மூலம் தொழிற்சாலையை ஒட்டி வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் மணவாளநகர், வெங்கத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுப்படுகிறது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொழிற்சாலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: