75 ஆண்டுகளுக்கு பின் பாக்.கில் உள்ள பூர்வீக வீட்டுக்கு சென்ற 90 வயது இந்திய மூதாட்டி: பிரிவினைக்கு முன் இந்து-முஸ்லிம் பேதமில்லை என பேட்டி

லாகூர்: புனேவில் வசிக்கும் 90 வயது மூதாட்டி, 75 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள தனது பூர்வீக வீட்டை சுற்றிப் பார்த்த உணர்வுப்பூர்வமாக பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிப்பவர் ரீனா சிபார் வர்மா (வயது 90). இவர் 15 வயது சிறுமியாக இருந்த போது, இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையால் கடந்த 1947ம் ஆண்டு ரீனா சிபாரின் குடும்பம் பாகிஸ்தானின் ராவல்பிண்டியிலிருந்து வெளியேறி புனேவுக்கு குடிபெயர்ந்தனர். பின்னர், 1965ல் ரீனா பாகிஸ்தான் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது. அதன் பின் ரீனாவால் பாகிஸ்தானுக்கு செல்ல முடியவில்லை.

தற்போது 90 வயதான நிலையில், வாழ்க்கையில் இறுதிகட்டத்திலாவது பூர்வீக வீட்டை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டார். இந்த முறையும் அவருக்கு விசா மறுக்கப்படவே, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் டிவிட்டர் மூலம் முறையிட்டார். அதைத் தொடர்ந்து, நல்லெண்ண நடவடிக்கைகள் அடிப்படையில் ரீனாவுக்கு பாகிஸ்தான் 3 மாத கால விசா வழங்கியது. இதன் மூலம் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ரீனா வாகா-அட்டாரி எல்லை வழியாக நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கிருந்து ராவல்பிண்டி சென்ற ரீனா, அங்கு தேவி கல்லூரி சாலையில் உள்ள ‘பிரேம் நிவாஸ்’ எனும் தனது பூர்வீக வீட்டை சென்று பார்த்தார். அங்கு அவர் படித்த பள்ளி, கல்லூரிகளையும், பழைய நண்பர்களையும் சந்தித்து பேசினார்.

இந்த பயணம் குறித்து ரீனா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ‘‘எனது சகோதரர்களின் முஸ்லீம் நண்பர்கள் என் வீட்டிற்கு வருவார்கள். என் அப்பா, ஆண், பெண் என பேதம் பார்க்காதவர். பிரிவினைக்கு முன்பு வரை இந்து, முஸ்லீம் என பிரிவினை இருந்ததில்லை. இந்த பிளவு அதன்பிறகு ஏற்பட்டதுதான். இந்தியா, பாகிஸ்தான் பிரிந்திருக்கக் கூடாது. ஆனால் நடந்து விட்டது. இனியாவது இரு நாடுகளும் தடையின்றி விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உணர்வுப்பூர்வமாக வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: