ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து கம்போடிய வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு

சாபர்மோன்: கம்போடியாவில் ராணுவத் தளத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 20 வீரர்கள் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். கம்போடிய தலைநகர் நோம் பென்னுக்கு மேற்கே உள்ள கம்போங் ஸ்பியு மாகாணத்தின் சாபர் மோன் மாவட்டத்தில் ஒரு ராணுவ தளம் உள்ளது. இந்நிலையில்,நேற்று முன்தினம் ராணுவத்தளத்தில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது என்றும் இதில் 20 வீரர்கள் பலியாயினர், பலர் காயமடைந்தனர் என்று பிரதமர் ஹுன் மானெட் கூறினார். ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்று வெடித்ததாக கம்போடிய ராணுவம் தெரிவித்தது. இந்த வெடி விபத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த 3 கட்டிடங்கள், ராணுவ அலுவலக கட்டிடம் ஆகியவை தரைமட்டமாகின.

ஏராளமான வாகனங்களும் வெடிவிபத்தில் சிக்கி உருக்குலைந்துள்ளன என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெடி விபத்தின் காரணமாக அருகில் உள்ள 25 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிவிபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. கம்போடியாவில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. தன்காரணமாகவும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற வெடிவிபத்துக்கள் கம்போடியாவில் அடிக்கடி நடக்கிறது. அந்தநாட்டில் கடந்த 2013ல் இருந்து 2019 வரை 500 வெடிவிபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் இதில், பலர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ஆயுத கணக்கெடுப்பு குழு தெரிவித்துள்ளது.

 

The post ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து கம்போடிய வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: