அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்

வாஷிங்டன்: அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் மாணவர்கள் கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்தும், போரை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசை வலியுறுத்தியும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் ராணுவம், இன படுகொலை மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற்றப்படும் என அமெரிக்கா உறுதியளிக்கும் வரை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறப்பவதில்லை என்று கூறி கல்லூரி வளாகத்திலேயே கூடாரங்கள் அமைத்து மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் பரவின. பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளே அமெரிக்க காவல்துறை தீவிரப்படுத்தியது.

பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடத்தி வந்த 200 மாணவர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்து இழுத்து சென்றனர். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க பல்கலைகழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள உலகளாவிய பல்கலைக்கழக மாணவர்களும் பலஸ்தீன ஆதரவு போராடத்தில் இணைந்துள்ளனர்.

 

The post அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: