செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: பொதுமக்கள் பீதி… நாசா விளக்கம்

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதற்கு நாசா விளக்கம் அளித்துள்ளது. ஐரோப்பா கண்டத்தின் முக்கியமான நாடுகளில் ஒன்று கிரீஸ். இதன் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு வரலாற்று சிறப்புகளுக்கு பெயர் போன ஏதென்ஸ் நகரம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடமாக விளங்குகிறது. இந்நிலையில் ஏதென்ஸ் நகரம் நேற்று முன்தினம் திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.

புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், அகோரா உள்பட ஏதென்ஸ் நகரமே ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது. திடீரென செவ்வாய் கிரகம்போல ஆரஞ்சு நிறத்தில் மாறியதால் சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பீதியடைந்தனர். இந்த நிற மாற்றத்துக்கு என்ன காரணம் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கம் அளித்துள்ளது. அதாவது, வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த காலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வழக்கம். இந்த மேக கூட்டத்துடன் சகாரா பாலைவனத்தின் புழுதி மண் துகள்கள் கலந்ததால் மேக கூட்டங்கள் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகத்தில் மண் துகள்கள் அதிகளவில் இருப்பதன் காரணமாக மாசுபாடு அதிகரிப்பதுடன் சுகாதார பிரச்னை ஏற்படலாம், கண்ணில் மாசு துகள்கள் படும்போது பிரச்னை ஏற்படுத்தலாம். சுவாச பிரச்னை ஏற்படலாம் என கிரீஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 2018ம் ஆண்டுக்கு பிறகு கிரீஸ் நாட்டை தாக்கும் மோசமான புழுதி புயல் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆரஞ்சு நிற வானம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆரஞ்சு நிறமாக மாறிய ஏதென்ஸ் நகரின் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

The post செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: பொதுமக்கள் பீதி… நாசா விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: