வரலாற்றில் முதல்முறை கோதாவரியில் 71 அடி உயரத்துக்கு வெள்ளம்: ஆந்திரா உட்பட 3 மாநிலங்கள் பாதிப்பு

புவனேஸ்வர்: ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் 300 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தோவலேஸ்வரம் அணையில் இருந்து 19.05 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. இதன் காரணமாக, கோதாவரி ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

3 மாநிலத்திலும் சுமார் 300 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 117 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்குப்பிறகு தெலுங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான பத்ராச்சலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. பத்ராச்சலத்தில் கோதாவரியின் நீர்மட்டம் வரலாற்றில் முதல் முறையாக 71அடியை தொட்டுள்ளது. ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்தில் பல கிராமங்கள் மற்றும் வயல்வெளிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மல்கங்கிரி கலெக்டர் விஷால் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் பினாயக்பூர், அலமா மற்றும் பேட்டா ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

3 அபாய கட்டங்கள்

பத்ராச்சலம் பகுதியில் கோதாவரி ஆற்றில் 3 நிலைகளில் வெள்ள அபாய கட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முதல் எச்சரிக்கை    43 அடி

2வது எச்சரிக்கை    48 அடி

3வது எச்சரிக்கை    53 அடி

இந்த 3 அபாய கட்டங்களையும் தாண்டி, 71.2 அடி உயரத்துக்கு வெள்ளம் செல்கிறது.

Related Stories: