வரும் 17ம் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்-5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து

திருமலை : ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும்  யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய  உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்கிழமைகளில், ஏழுமலையான் கருவறை முதல்  கோயில் முன் வாசல் வரை சுத்தம் செய்யும் (ஆழ்வார் திருமஞ்சனம்) பணி  நடைபெறுவது வழக்கம். அதன்படி 17-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் அன்று நடக்கிறது.

1956ம்  ஆண்டுக்கு பின்பு, திருமலை- திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கிய பின்  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோயில் கணக்கு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம்  1ம் தேதி முதல் புதிய கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இருப்பினும்  சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோயிலில் ஆனி மாதம் கடைசி நாள் வரவு, செலவு  கணக்குகள் முடிக்கப்பட்டு புதிய கணக்குகள் சுவாமி முன் படிக்கப்படும்.  அதன்படி இந்தாண்டு நட்சத்திர திதிப்படி ஆடி 1ம் தேதி(ஜூலை 17ம் தேதி)  ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதில் சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம்  சமர்பிக்கப்படும். இந்த சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தலா 1  ரூபாய் பெறப்பட்டு புதிய ஆண்டுக்கான கணக்கு தொடங்கப்படும்.

இதையொட்டி  நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. அப்போது ஏழுமலையான் கோயில் மூலவர்  மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கல் மண்டபங்கள்,  தங்க கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களும், தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு  பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கட்டி கற்பூரம், மூலிகை திரவியங்கள்  கொண்ட கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அப்போது செயல் அதிகாரி  தர்மாரெட்டி தங்க கொடிமரத்தை சுத்தம் செய்தார்.

பின்னர் மூலவர் மீது  சாத்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டு  நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் 11 மணிக்கு பிறகு பக்தர்கள்  தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் 5 மணி நேரத்திற்கு பக்தர்கள்  தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதேபோல் விஐபி தரிசனம் நேற்று  அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் சுப்பா ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள். ஆனால் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக கோயிலுக்குள் பக்தர்கள் இன்றி நடந்தது. இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் வெள்ளத்தில் சிறப்பாக நடத்தப்படும். இதற்காக மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும். எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் அதற்கேற்ப முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும். வரும் செப்டம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 1ம்தேதி கருட சேவை நடைபெறும்.

சமீப காலமாக இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் குறையவில்லை. பக்தர்கள் வருகை குறைந்த பின்னர் நேர ஒதுக்கீடு செய்து இலவச டிக்கெட் வழங்கப்படும்.

ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சனேயருக்கு செம்பு கவசம் அகற்றி தங்க கவசம் ₹18.75 லட்சம் செலவில் செய்யப்பட உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பக்தர் ஒருவர் பெங்களூர் டாலர்ஸ் காலனியில் 3,080 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு, ₹3.23 கோடி ரொக்கம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கி உள்ளார். லட்டு தயாரிக்க ஆஸ்திரேலிய மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனத்தினர் பூந்தியை மட்டும் ஆட்டோமெட்டிக் முறையில் இயந்திரங்கள் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும் ஆய்வு செய்து இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

ஏழுமலையான் கோயில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலைய தங்க தகடுகள் மாற்றுவது குறித்து ஆகம ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும். திருமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆக்டோபஸ் கமொண்டோ படையினருக்கான கட்டிடப்பணிக்கு அரசு ₹10 கோடி வழங்கிய நிலையில் தேவஸ்தானம் சார்பில் ₹7 கோடி வழங்கி விரைவில் பணிகள் முடிக்கும். இவ்வாறு கூறினார்.

₹5.58 கோடி காணிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 62 ஆயிரத்து 141 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 33,880 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு எண்ணப்பட்டது. இதில் ₹5.58 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பியிருந்தது. இதனால் பக்தர்கள் ஆஸ்தான மண்டபம் வரை 16 மணிநேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்தனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து தரிசித்தனர்.

Related Stories: