விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையால் பிறந்த குழந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்து சென்ற தந்தை

திருமலை: விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையால் பிறந்த குழந்தையை காப்பாற்ற தந்தை ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்தபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோட்னந்தூரைச் சேர்ந்த தம்பதி அல்லு சிரிஷா- அல்லு விஷ்ணுமூர்த்தி. அல்லு சிரிஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை விஷ்ணுமூர்த்தி விசாகப்பட்டினம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிரிஷாவிற்கு குறைமாதத்தில் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையை அதே வளாகத்தில் உள்ள குழந்தைகள் வார்டில் இணைக்கப்பட்ட என்.ஐ.சி.யூ. பிரிவில் வைக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

இதனால் குழந்தையை ஆக்ஸிஜனில் வைத்து என்.ஐ.சி.யூ க்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் பணியாளர்கள் பற்றாக்குறையால் குழந்தையைப் பிடித்துக் கொண்டு செவிலியர் முன்னே சென்று கொண்டிருக்க குழந்தையின் தந்தை அல்லு விஷ்ணுமூர்த்தி, ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வைரலானது. சரியான ஊழியர்கள் இல்லாதது ஆக்சிஜன் சிலிண்டருக்கான ட்ராலி இல்லாமல் தோளில் சுமந்து செல்லும் நிலை என நெட்டிசன்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது விமர்சனம் செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் சிவானந்தம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

The post விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையால் பிறந்த குழந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்து சென்ற தந்தை appeared first on Dinakaran.

Related Stories: