54வது பிறந்தநாள் ராகுல் காந்திக்கு தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: ராகுல் காந்தி நேற்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி காங்கிரஸ்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 54வது பிறந்தநாளை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி நேற்று கொண்டாடினார். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொது செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி, பொருளாளர் அஜய் மக்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையொட்டி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

இதையொட்டி மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் பதிவிடுகையில், அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் மீதான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, கேட்கப்படாத கோடிக்கணக்கான குரல்கள் மீதான உங்கள் அழுத்தமான இரக்கம் ஆகியவை உங்களுடைய தனித்து நிற்கும் பண்புகள்.வேற்றுமையில் ஒற்றுமை, மத நல்லிணக்கம்,கருணை ஆகிய கட்சியின் நெறிமுறை உங்களுடைய அனைத்து செயல்களிலும் தெரிகிறது. மகி்ழ்ச்சியான, நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிடுகையில்,அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாட்டு மக்களுக்கான அர்ப்பணிப்பு உங்களை மிகுந்த உயரத்திற்கு கொண்டு செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார்) கட்சி தலைவர் சரத் பவார், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா(உத்தவ் ) தலைவர் ஆதித்ய தாக்கரேவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய டிவிட்டர் பதிவில்,அன்பைத் தேர்ந்தெடு’ என்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்த தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கோபம், வெறுப்பு மற்றும் கண்ணீருக்கு எதிராக நின்ற தலைவர். நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்க முன்னணியில் இருந்து வழிநடத்திய தலைவர் ஒருவர். ஒரு தலைவன் ஒளியைக் கொண்டு வந்து நம்பிக்கையை மீட்டெடுத்தான். நீங்கள் ராகுல் காந்தியாக இருப்பதற்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் பக்கம் நிற்பதே அவரது பார்வை. தியாகம் என்பது பரம்பரை, சண்டையே அவரது தத்துவம். அவர் சாமர்த்தியசாலி மற்றும் நாளைய இந்தியாவின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரே தலைவர் ராகுல்காந்தி் என்று பதிவிட்டுள்ளார்.

* பிரியங்கா வாழ்த்து
பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், என் இனிய சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் என் நண்பர், என் சக பயணி, வழிகாட்டி, தத்துவஞானி மற்றும் தலைவராக இருக்கிறீர்கள். எப்பொழுதும் ஜொலித்து கொண்டே இருங்கள்.உங்களை மிகவும் நேசிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post 54வது பிறந்தநாள் ராகுல் காந்திக்கு தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: