தமிழகத்திலேயே மிகவும் பழமையான சேலம் சிறையை ஆத்தூருக்கு மாற்ற திட்டம்-‘160 ஆண்டுகளை நெருங்கும் கருப்புகுல்லா ஜெயில்’

சேலம் : தமிழகத்திலேயே மிகவும் பழமையான சேலம் மத்திய சிறையை ஆத்தூர் பகுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் செய்து வருகின்றனர். புதிய சிறை கட்டுவதற்கான இடம் பார்க்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் மிகவும் பழமையான சிறைகளில் முக்கியமானது சேலம் மத்திய சிறை. 1862ம்ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்தச்சிறையானது, வேறு எந்த சிறையிலும் இல்லாத வகையில் 1,432 தனித்தனி அறைகள் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களை இச்சிறையில் அடைத்து கொடுமை படுத்தும் வகையில் தனித்தனி அறைகள் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே ஒருவரை ஒருவர் முகம் பார்க்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஏராளமான சுதந்திர போராட்ட தியாகிகள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் சுப்பிரமணியசிவா இச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில், வெளியே சென்றபோதுதான் தொழுநோய் தொற்றுக்கு ஆளானார் என்பது ஒரு அதிர்ச்சியூட்டும் வரலாறு.

பல்லாண்டுகளை கடந்தும் இன்றுவரை இச்சிறை கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. கருப்புகுல்லா சிறை என்றழைக்கப்படும் சேலம் மத்திய சிறை, 113.19 ஏக்கர் பரப்பளவில் சேலத்தின் மையப்பகுதியான அஸ்தம்பட்டியில் இருக்கிறது. இதன் எதிர்பகுதியில் நீதிமன்றம் இருப்பதால் கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு அப்படியே சிறைக்குள் அடைக்கப் படுவார்கள். கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் கைது செய்யப்படும் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் இங்கு கொண்டு வந்து அடைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இச்சிறையை சேலம் மாநகரில் இருந்து வெளிப்பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவை மத்திய சிறை 1872ம்ஆண்டு கட்டப்பட்டது. இச்சிறை தற்போது மேட்டுப்பாளையம் பகுதிக்கு மாற்றப்படுகிறது. 1865ம்ஆண்டு கட்டப்பட்ட மதுரை மத்திய சிறை 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அச்சிறையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வெளியே கொண்டு செல்ல அதிகாரிகள் இடங்களை பார்த்து வருகின்றனர்.

அந்தவகையில் சேலம் மத்திய சிறையும் இடம் மாறவுள்ளது.சேலத்தில் இருந்து வெளியே போகும் நிலையில், ஆத்தூர் அருகே புதிய சிறைகட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இதற்கான இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து சிறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மத்திய சிறையை ஆத்தூர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரமாண்டமான முறையில் புதிய சிறை கட்டப்படும். இதற்கான பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது,’’ என்றனர்.

கடைசி தூக்குதண்டனை நிறைவேற்றிய சிறை

‘‘தமிழகத்தை உலுக்கிய பல்வேறு கொலை குற்றவாளிகளுக்கு சேலம் மத்திய சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வகையில் தமிழகத்தை அதிரவைத்த சைக்கோ கில்லர் ஆட்டோ சங்கருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை 1995ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி அதிகாலை 5.14மணிக்கு நிறைவேற்றப்பட்டது. இது தான் சேலம் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்ட கடைசி தூக்கு தண்டனையாகும். இதுவே தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட  கடைசி தூக்கு தண்டனை,’’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: