உத்தரகாண்ட் கோயிலுக்கு சென்ற போது ரோப் காரில் அந்தரத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ; தொழில்நுட்ப கோளாறால் 60 பக்தர்களுடன் தவிப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் கோயிலுக்கு ரோப் காரில் சென்ற பாஜக எம்எல்ஏ உள்பட 60 பேர் அந்தரத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் அனைவரும் மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள சுர்கந்தா தேவி கோயிலுக்கு செல்ல வசதியாக கேபிள் ரோப் கார் வசதி உள்ளது. சுர்கந்தா தேவி கோயிலில் இருந்து கடுக்கால் வரை 502 மீட்டர் நீளமுள்ள கேபிள் ரோப் கார் வசதியானது கிட்டத்தட்ட ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டது.

இந்த ஆண்டு மே மாதம் முதல் கேபிள் ரோப் கார் இயங்கி வருகிறது. பக்தர்களும் இந்த ரோப் காரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏ கிஷோர் உபாத்யாய் உட்பட 60 பேர் நேற்று சுர்கந்தா தேவி கோயிலுக்கு ரோப் காரில் சென்றனர். கோயிலுக்கு சென்று திரும்பும் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரோப் கார் அந்தரத்தில் நின்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் கோளாறு சரிசெய்யப்பட்டு இயக்கப்பட்டது. இதனால், எம்எல்ஏ உள்ளிட்ட 60 பேரும் தப்பினர். வட இந்தியாவில் கேபிள் ரோப் கார்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் பர்வானூ டிம்பர் டிரெயில் கடந்த ஜூன் மாதம் ரோப் கார் சிக்கியது. அதிலிருந்த 11 பேர் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்டில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 15 சுற்றுலா பயணிகள் திரிகுட் மலையில் இரண்டு நாட்களாக சிக்கித் தவித்தனர். விமானப்படையினரால் 12 பேர் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: