சித்தூர் மாவட்டத்தில் பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை-ஆயிரக்கணக்கில் திரண்ட முஸ்லிம்கள்

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் திரண்டு தொழுகையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின்படி 12வது மாதமான துல்ஹஜ் மாதம் 10வது நாளில் பக்ரீத் தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இப்ராகிம் நபியின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் இத்திருநாள் நேற்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புத்தாடைகள் அணிந்த இஸ்லாமியர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அதன்படி, சித்தூர் தர்கா  மிட்ட பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஏராளமான முஸ்லிம் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

இதுகுறித்து முஸ்லிம் மத குரு காஜி சாகிப் கூறுகையில், இப்ராஹிம் என்பவர் அல்லா கடவுளின் தீவிர பக்தர் ஆவார் இவருக்கு 80 ஆண்டுகள் கழித்து ஒரு மகன் பிறந்தார். அப்போது கடவுள் கனவில் வந்து என் மீது உனக்கு பக்தி பாசம் இல்லை.  உனது மகன் மீது உனக்கு அதிக அளவு  பாசம் உள்ளது என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இப்ராஹிம் கடவுளிடம் எனக்கு எனது மகனை விட கடவுளாகிய உன் மீது அளவுக்கு அதிகமாக பாசம் பக்தி உள்ளது என தெரிவித்தார்.

அப்படி என்றால் உனது மகனை எனக்கு பலியிட வேண்டும் என கடவுள் தெரிவித்தார். இதனால் இப்ராஹிம் கடவுளின் வேண்டுதலுக்கு ஏற்ப தனது மகனை பலியிட கத்தியால் வெட்ட நினைத்தார். ஆனால் கத்தி இரண்டாக பிளந்தது. அப்போது அவருடைய மகன் அப்பா என் மீது விட உனக்கு கடவுள் மீது அதிக பக்தியும் பாசமும் உள்ளது. எனவே, நீ உனது கண்களை கட்டிக்கொண்டு என்னை கடவுளுக்கு பலியிட வேண்டும் என தெரிவித்தார்.

இதனால் இப்ராஹிம் தனது கண்களை கருப்பு துணையால் கட்டிக்கொண்டு தனது மகனை கத்தியால் பலியிட வெட்டும் போது கடவுள் நேரில் வந்து இப்ராஹிம் மகனை தள்ளிவிட்டு அங்கு ஒரு ஆட்டை நிறுத்தினார். அப்போது இப்ராஹிம் ஆட்டை வெட்டி விட்டார். பின்னர், இப்ராஹிம் கண்ணை திறந்து பார்த்தபோது தனது மகனுக்கு பதிலாக ஆடு பலியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது இப்ராஹிமிடம் கடவுள் உனது மகனை விட என் மீது நீ அளவுக்கு அதிகமாக பக்தியும் பாசமும் வைத்துள்ளாய். எனவே, உனது மகனை நான் காப்பாற்றி ஒரு ஆட்டை பலியிட்டேன் என தெரிவித்தார். அப்போது கடவுளிடம் இப்ராஹிம் இந்த ஆட்டை நான் என்ன செய்வது என கேட்டார். அதற்கு, பலியிட்ட இந்த இந்த  ஆட்டை மூன்று பங்குகளாக பிரித்து உனக்கு ஒரு பங்கு, ஏழை எளிய மக்களுக்கு ஒரு பங்கு, சொந்த பந்தங்களுக்கு ஒரு பங்கு என சமமாக பிரித்து வழங்க வேண்டும் என கடவுள் தெரிவித்தார்.

அதன்படி, இப்ராஹிம் ஆட்டு இறைச்சியை மூன்று பங்குகளாக சமமாக பிரித்து வழங்கினார். அன்றைய தினத்தை உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ஆடு, மாடுகளை பலியிட்டு அதை மூன்று பங்குகளாக பிரித்து ஏழை எளிய மக்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் அவர்களுக்கும் என மூன்று பங்குகளாக பிரித்து வழங்கி பக்ரீத் பண்டிகை என முஸ்லிம் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல் சித்தூர், திருப்பதி மாவட்டம் முழுவதும் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Related Stories: