பர்மிங்காமில் இன்று 2வது ஆட்டம்; 5 மாதத்திற்கு பின் டி.20 போட்டியில் களம் இறங்கும் விராட் கோஹ்லி; இந்தியா தொடரை வெல்ல கைகொடுப்பாரா?

பர்மிங்காம்: இங்கிலாந்து-இந்தியா இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்தியா 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில் 2வது டி.20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு பர்மிங்காமில் தொடங்கி நடக்கிறது. முதல் போட்டியில் ஓய்வில் இருந்த விராட் கோஹ்லி, பும்ரா, ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இதனால் ஆடும் லெவனில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதில் இஷான் கிஷன், தினேஷ்கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், ஹர்சல்பட்டேல் அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பதிலாக கோஹ்லி, ரிஷப் பன்ட், ஜடேஜா மற்றும் பும்ரா களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோஹ்லி 5 மாதத்திற்கு பின் டி.20 போட்டியில் இந்தியாவுக்காக களம் இறங்குகிறார். கடைசியாக கடந்த பிப்.18ம் தேதி கொல்கத்தாவில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக ஆடினார்.

அதன்பின்னர் இந்திய அணிக்காக டி.20 போட்டியில் ஆடவில்லை. இளம்வீரர்கள் ஆக்கிரமிப்பால் அவர் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள ரன் குவிக்கவேண்டிய நெருக்கடியில் உள்ளார். இதுவரை இந்தியாவுக்காக 97 டி.20 போட்டிகளில் ஆடி உள்ள கோஹ்லி 30 அரைசதத்துடன் 3296 ரன் அடித்துள்ளார். சராசரி 51.50. நேற்று அவர் சுமார் 90 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி செய்தார். அதனை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உன்னிப்பாக கவனித்தார்.

ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் இருவரும் 15 நிமிடங்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர். மீதமுள்ள 2 டி.20 போட்டிகளில் அவரின் செயல்பாட்டை பொறுத்து உலக கோப்பை டி.20 போட்டிக்கு கோஹ்லிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே 2வது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. ரோகித்சர்மாவின் தலைமையில் இந்தியா தொடர்ச்சியாக 13 டி.20 போட்டிகளில் வென்றுள்ளது.

அதனை தொடரும் உற்சாகத்தில் உள்ளது. மறுபுறம் இங்கிலாந்து முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இரு அணிகளும் 21வது முறையாக டி.20 போட்டியில் இன்று மோத உள்ளது. இதற்கு முன் மோதிய 20 போட்டியில் இந்தியா 11, இங்கிலாந்து 9ல் வென்றுள்ளது. பர்மிங்காமில் இந்தியா இதற்கு முன் 2014ம் ஆண்டு ஒரே ஒரு போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடி உள்ளது. இதில் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது.

Related Stories: