நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி அப்பர்பவானி அணையில் நீர் மட்டம் 94 அடியாக உயர்வு

மஞ்சூர்: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் அப்பர்பவானி அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான அணைகள் உள்ளது. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் 13 மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இதில் மஞ்சூரை அடுத்துள்ள அப்பர்பவானி அணை மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 210 அடிகளாகும். அப்பர்பவானி அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின் நிலையங்கள் இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்வாரியத்தின் சார்பில் கடந்த மாதம் அப்பர்பவானி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அணை திறக்கப்பட்டு நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து மீண்டும் அணையில் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் போதிய மழை பெய்யாததால் அணைக்கான நீர் வரத்து மிகவும் குறைவாகவே காணப்பட்டது. கடந்த ஜூன் மாதம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பருவமழையும் போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர் மட்டம் அடியோடு சரிந்தது. இந்நிலையில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.  

அதிலும் அப்பர்பவானி பகுதியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 18 செமீ மழை பெய்துள்ளது. அதையொட்டியுள்ள அவலாஞ்சி பகுதியிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவாதால் அப்பர்பவானி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.  கடந்த 2 நாட்களுக்கு முன் 24 அடியாக நீர் இருப்பு இருந்தநிலையில் நேற்றைய நிலவரப்படி 94 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அப்பர்பவானி அணை நீர் மட்டம் மேலும் உயர்ந்து மின்நிலையங்களில் தடையற்ற மின் உற்பத்தி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என கூறினார்கள்.

Related Stories: