சிறுசேரியில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் மென்பொருள் பூங்காவில் ரூ.35 கோடியில் வணிக வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்

திருப்போரூர்: சிறுசேரி தீயணைப்பு நிலையத்திற்கு ரூ. 1.56 கோடியில் புதிய கட்டிடமும், சிறுசேரி மென்பொருள் பூங்காவில் ரூ.35 கோடி மதிப்பில் வணிக வசதி மையத்தை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். சென்னை புறநகர் பகுதியான சிறுசேரியில் தகல் தொழில் நுட்ப பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 50க்கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தொழிற்பேட்டை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் செயல்பட்டு வருகிறது. மிகச்சிறிய அளவில் இருப்பதால் தற்போது 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பில் புதிய அலுவலகம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த கட்டிடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுசேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். சிறுசேரி தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சையது முகமது ஷா, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் திருநாவுக்கரசர், சிறுசேரி தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி இனிப்பு வழங்கினர்.

இதைத்தொடர்ந்து சிறுசேரி மென்பொருள் பூங்காவில் ரூ.35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வசதி மையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். சிறுசேரியில் நடைபெற்ற இதற்கான விழாவில் சிறுசேரி சிப்காட் திட்ட அலுவலர் சாந்தினி குத்து விளக்கேற்றி கலந்து கொண்டார்.

Related Stories: