மாநிலங்களவை பதவிக்காலம் முடிவதால் 2 ஒன்றிய அமைச்சர்கள் நக்வி, சிங் ராஜினாமா: ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்யாவுக்கு கூடுதல் பொறுப்பு

புதுடெல்லி: மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வியும், ஆர்சிபி.சிங்கும் நேற்று ஒரே நாளில் பதவியை ராஜினாமா செய்தனர். ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பாஜ.வின் முக்தர் அப்பாஸ் நக்வியும், உருக்கு துறை அமைச்சராக ஐக்கிய ஜனதா தளத்தின் ஆர்சிபி.சிங்கும் பதவி வகித்து வந்தனர். இருவரும் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்வாகி அமைச்சரானவர்கள்.

சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் இவர்கள் இருவருக்கும் மீண்டும் போட்டியிட இந்த கட்சிகள் வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால், மீண்டும் எம்பியாக முடியாததால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், முக்தர் அப்பாஸ் நக்வி, ஆர்சிபி சிங் இருவரும் தங்களின் ஒன்றிய அமைச்சர் பதவியை நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். முன்னதாக, ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இரு அமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சிறுபான்மையினர் நலத்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், உருக்கு துறையானது விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளித்துள்ளார்.

இன்னும் 2 பேர் தான் மிச்சம்

தற்போது, பாஜ தலைமையிலான ஒன்றிய கூட்டணி ஆட்சியில் ஆர்பிஐ (ஏ) கட்சியின் ராம்தாஸ் அதுவாலேவும், அப்னா தளத்தின் அனுபிரியா படேலும் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை ஜனாதிபதி வேட்பாளரா?

முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்ததன் மூலம், 400 எம்பிக்களை கொண்ட பாஜ கூட்டணியில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையிலும் இஸ்லாமியர்கள் யாருமில்லை. இதனால், முக்தர் அப்பாஸ் நக்வி, துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜ சார்பில் களமிறக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: