விவசாயிகள் அனைத்து பலன்களையும் பெற இணையவழி பதிவு செய்யலாம்: தோட்டக்கலை துறை தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட தோட்டக்கலை துணை  இயக்குநர் தே.சாந்தா செலின்மேரி  விடுத்துள்ள அறிக்கை: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டம் ஆகிய ஒன்றிய அரசு திட்டங்களும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம் முதலான மாநில அரசு  திட்டங்களும் இவ்வாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டங்களில் காளான் வளர்ப்பு, நிரந்தர கல்பந்தல் அமைத்தல், பசுமைக் குடில், நிழல் வலைக்குடில், பழமரக் கன்றுகளான மா, கொய்யா, சப்போட்டா, பெரு நெல்லி, காய்கறி நாற்றுகள், காய்கறி விதைகள், காய்கறி சாகுபாடிக்கான ஊக்கத்தொகை, சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல், சொட்டு நீர் பாசனத்தில் செலுத்தும் நீரில் கரையும் உரங்கள், மாடித்தோட்ட தளைகள், செங்குத்து தோட்டம் அமைத்தல், ஹைட்ரோ போனிக்ஸ் சாகுபடி, களைகளை கட்டுப்படுத்தும் பாய்விரிப்பு, இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணையம், மூங்கில் பந்தல் அமைத்தல் போன்றவற்றிற்கு நடப்பு நிதியாண்டில் (2022-23) இருந்து மானியம் பெற விரும்பும் விவசாயிகள் இணைய தளம் வழியாக பதிவு செய்தால் மட்டுமே மானியங்கள் பெற முடியும் என தெரிவிக்கப் படுகிறது.

இதற்காக //www.tnhorticulture.tn.gov.in, //www.tnhortnet/login.php என்ற இணையதளம் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். இணையவழியில் பதிவு செய்யத் தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயனடையுமாறு அறிவித்துள்ளார். தோட்டக்கலை ஆன்லைன் மானிய விண்ணப்பத்தில் விவசாயின் பெயர் மற்றும் முகவரி, ஆதார் அட்டை எண், கிராமம், வட்டாரம், மாவட்டம் முதலான விபரங்களை பூர்த்தி செய்தல் வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்தவுடன் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்வு செய்தல் வேண்டும். அத்திட்டத்திலுள்ள திட்ட இனம், உபஇனம், முன்மொழியப்பட்ட பயிர், தேவையான அளவு ஆகியவற்றை பூர்த்தி செய்தல் வேண்டும். விவசாயின் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவும். பதிவு தொடர்பான குறுஞ்செய்தி விவசாயின் கைப்பேசி எண்ணிற்கு வந்தடையும்.

Related Stories: