புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்

சிவகாசி: பட்டாசு தொழில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் புதிய தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்ய 11 பேர் கொண்ட குழுவை, ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கடந்த 2016ல் ஒரு பட்டாசு கடையில், பட்டாசு பண்டல்களை இறக்கும்போது விபத்து ஏற்பட்டது. இதில், அருகில் இருந்த ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்த டாக்டர் உட்பட 9 பேர் புகையால் மூச்சுத்திணறி பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர். இதுபற்றி நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில், ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், பட்டாசு தொழில் பாதுகாப்பு விதிகளில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தொழிலை மேம்படுத்தவும் ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் ஃபயர் சர்வீஸ் கல்லூரி இயக்குநர் சவுத்ரி, தொழில்நுட்ப ஆலோசகர் நாராயணன், பொறியாளர் உமேத்சிங், பனாரஸ் இந்து பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் தியாசங்கர் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு வெடி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கணேசன், பட்டாசு வியாபாரிகள் சங்க பிரதிநிதி மணிக்ரோ, தனியார் நிறுவன செயல் அலுவலர் ஷா, பயர் சேஃப்டி அசோசியேசன் அஜித் ராகவன், மும்பை தேசிய பாதுகாப்பு கவுன்சில் லலித் கோப்ஹனா, தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர் ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் பட்டாசு தொழிலில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு மற்றும் தொழில் மேம்பாடு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இதேபோல் பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் பட்டாசு தொழிலை புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு நடத்தி, ஒரு மாதத்திற்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க, ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சகம் இந்த குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: