வேளாங்கண்ணி, நாகூருக்கு இந்துக்கள் செல்கின்றனர் கோவில் திருவிழாக்களில் எந்த மதத்தினரும் பங்கேற்கலாம்: எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு

மதுரை: குடமுழுக்கு விழாவில் பிற மதத்தினரை அனுமதிக்க கூடாது என தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, வேளாங்கண்ணி, நாகூருக்கு இந்துக்களும் செல்கின்றனர், எனவே கோயில் குடமுழுக்கு விழாவில் எந்த மதத்தினரும் கலந்து கொள்ளலாம் என கூறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், பிரம்மபுரம் அருகே விளைவீட்டைச் சேர்ந்த சோமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு : கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் நடக்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் பங்கேற்று வருகின்றனர். திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வரும் 6ம் தேதி குடமுழுக்கு விழா 418 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்குமாறு அமைச்சர் மனோ தங்கராஜூக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆதிகேசவபெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவின்போது, கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பிஎன்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மனுதாரர் கோரிக்கை ஏற்புடையது அல்ல. பிற மதத்தினர் பங்கேற்கக் கூடாது என விதிகள் இல்லையே? 120 கோடி இந்தியர்கள் உள்ளனர். கோயிலுக்கு வரும் இவர்களை ஒவ்வொருவராக அடையாளம் காண்பது என்பது சாத்தியமற்றது. அது தேவையில்லாதது’’ என்றனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘பொது நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டவர்கள்தான் வர வேண்டும் என கூற முடியாது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர். வேளாங்கண்ணி, நாகூர் போன்ற இடங்களில் பல்வேறு மதத்தினரும், இந்துக்களும் வழிபாடு செய்கின்றனர். இதை குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது. பொது நிகழ்ச்சிக்கு வரும் யாரையும் தடுக்க முடியாது’’ என்றார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘பக்தர்கள் எந்த மதத்தினர் என்பதை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் அனுமதிப்பது என்பது சாத்தியமற்றது. மாற்று மதத்தினர் அவரவர் நம்பிக்கை வைத்து கோயில், மசூதி மற்றும் தேவாலயத்திற்கு செல்வதை தடுக்க முடியாது. இது அவர்களது நம்பிக்கையை சார்ந்தது. வேளாங்கண்ணி தேவாலயம் மற்றும் நாகூர் தர்காவிற்கு இந்துக்கள் ஏராளமானோர் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இவர்களை எல்லாம் எந்த மதத்தினர் என்பது அடையாளம் காண முடியாது. இது போன்றவற்றை குறுகிய கண்ணோட்டத்தோடு அணுக வேண்டிய அவசியம் இல்லை. தொலைநோக்கு பார்வை தேவை. எனவே இந்த மனு ஏற்புடையது அல்ல’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

* ஐயப்பன் கோயிலில் யேசுதாஸ் பாடல்கள்

நீதிபதிகள் பிஎன்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா மேலும் உத்தரவில் கூறுகையில், கிறிஸ்தவ மதத்தை  சேர்ந்த பாடகர் யேசுதாஸ், இந்து கடவுள் பாடல்களை அதிகமாக பாடியுள்ளார். அவரது ஹரிவராசனம் பாடல் தற்போதும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒலிக்கிறது. அதில்  எப்படி தலையிட முடியும் என்றனர்.

Related Stories: