தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் மீட்கப்பட்ட இலங்கை மூதாட்டி சாவு

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் மணல் திட்டில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட இலங்கை மூதாட்டி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் கடந்தமாதம் 27ம் தேதி இலங்கையை சேர்ந்த வயது முதிர்ந்த இரு அகதிகள் மயக்க நிலையில் மீட்கப்பட்டனர். பெண்ணின் நெற்றியில் ரத்தக்காயம் இருந்தது. இருவரது உடமைகளையும் சோதனை செய்ததில் இலங்கை முருங்கன் பகுதி கொல்லர்ஸ்ரீகுளத்தை சேர்ந்த பெரியண்ணன் (82), திரிகோணமலையை சேர்ந்த பரமேஸ்வரி (71) என தெரியவந்தது. இருவரும் இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்து மணல் திட்டில் இறங்கி மயங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் முதியவர் பெரியண்ணன் உடல் நலம் தேறினார். பரமேஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரமேஸ்வரி உயிரிழந்தார். இதுகுறித்து மரைன் போலீசாரும், புலனாய்வு துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: