நுபுர் சர்மா மீதான கண்டன விவகாரம்; கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: ஒன்றிய சட்ட அமைச்சர் பதில்

ஐதராபாத்: நுபுர் சர்மாவின் நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்ற ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையல்ல.

எனக்கு நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பு தொடர்பாக கடுமையான ஆட்சேபனைகள் இருந்தாலும் கூட, நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நுபுர் சர்மா விவகாரம் குறித்து நிறைய எதிர்வினைகள் வருகின்றன; இந்த பிரச்னை குறித்து பொருத்தமான இடத்தில் விவாதிப்போம். உச்சநீதிமன்றத்தின் பெஞ்ச் கூறியது வாய்வழி கருத்தே தவிர, தீர்ப்பின் ஒரு பகுதி அல்ல’ என்றார்.

Related Stories: