ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய ஆர்ஐ, விஏஓ அதிரடி கைது

குளத்தூர்: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள மேட்டு பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(64). இவர், குடும்பத்துடன் மதுரையில் வியாபாரம் செய்து வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக குளத்தூர் கு.சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் உள்ள சுமார் 10.95 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்காக கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் மெய்த்தன்மை சான்றுக்காக மனு அளித்துள்ளார். இந்த மனு விசாரணைக்காக குளத்தூர் ஆர்ஐ அலுவலகம் மற்றும் விஏஓ அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. மனு குறித்து குளத்தூர் கீழ்பாகம் விஏஓ உமேஷ்குமார் விசாரணை மேற்கொண்டு அடுத்ததாக ஆர்ஐ அலுவலகத்திற்கு மனுவை அனுப்பி உள்ளார். அங்கு ஆர்ஐ செந்தில்முருகன் மனு சம்பந்தமாக முனியசாமியை அழைத்து தனக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 10.95 ஏக்கர் நிலத்திற்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தால்  சான்று வழங்குவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து முனியசாமி தூத்துக்குடி லஞ்சஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் அறிவுறுத்தலின்படி, நேற்று மதியம் முனியசாமி, ஆர்ஐ செந்தில்முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை எங்கு வந்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு செந்தில்முருகன் தான் அருப்புக்கோட்டையில் இருப்பதாகவும், குளத்தூர் ஆர்ஐ அலுவலகத்தில் கீழ்பாகம் விஏஓ உமேஷ்குமார் இருப்பதாகவும் அவரிடம் பணத்தை கொடுக்குமாறும் கூறியுள்ளார். உடனே முனியசாமி, குளத்தூர் ஆர்ஐ அலுவலகம் சென்று விஏஓ உமேஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை கொடுத்துவிட்டு ஆர்ஐ செந்தில்முருகனுக்கு செல்போனில் ரூ.3 லட்சம் கொடுத்துவிட்டதாக தகவல் கூறியுள்ளார். அதற்கு செந்தில்முருகன் ரூ.3 லட்சம் போதாது என்றும், மீதி ரூ.30 ஆயிரம் தருமாறும் கேட்டுள்ளார். அதையும் தான் கொடுத்து விடுகிறேன் என முனியசாமி கூறியுள்ளார். (செல்போனில் பேசிய அனைத்தையும் முனியசாமி பதிவு செய்துள்ளார்).

அப்போது குளத்தூர் ஆர்ஐ அலுவலகம் அருகே இருந்த லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஏஓ உமேஷ்குமாரை லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்து குளத்தூர் கீழ்பாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அருப்புக்கோட்டையில் இருந்த ஆர்ஐ செந்தில் முருகனையும்  கைது செய்து அழைத்து வந்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் அலுவலகத்தில் சோதனையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தனர். பின்னர் கைதான இருவரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories: