சரிதா நாயரை பலாத்காரம் செய்ய முயற்சி கேரளா முன்னாள் அரசு தலைமை கொறடா கைது: வேறு விசாரணைக்கு அழைத்து அதிரடி

திருவனந்தபுரம்: அரசு விருந்தினர் மாளிகைக்கு தன்னை வரவழைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக சரிதா நாயர் அளித்த புகாரின் பேரில், கேரள முன்னாள் அரசு தலைமை கொறடா பி.சி. ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். கேரளாவில் ‘கேரள ஜன பக்ஷம்’ என்ற கட்சித் தலைவராக இருப்பவர் பி.சி.ஜார்ஜ். முன்னாள் எம்எல்ஏ.வான இவர், உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் தலைமை கொறடாவாகவும் இருந்தார். இந்நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னாவுடன் சேர்ந்து கேரள அரசுக்கும், முதல்வர் பினராய் விஜயனுக்கும் எதிராக சதித்திட்டம் தீட்டியதாக இவர் மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கண்டோன்மென்ட் போலீசார் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு பி.சி. ஜார்ஜை நேற்று வரவழைத்தனர்.

அப்போது திடீரென சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக ஒரு புகார் கொடுத்து இருப்பதாகவும், அந்த புகாரில் கைது செய்வதாகவும் பி.சி. ஜார்ஜிடம் போலீசார் கூறினர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்குப் பின் மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, சரிதா நாயர் திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில், ‘கடந்த பிப்ரவரி 10ம் தேதி ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும் என்று கூறி திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு பி.சி. ஜார்ஜ் என்னை வரவழைத்தார். அப்போது பி.சி. ஜார்ஜ் என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன,’’ என்றார்.

Related Stories: