சுகுணா, சத்யா, சரண்யா என ஊருக்கு ஒரு பெயரை மாற்றி 2வது திருமணம் செய்த ஆந்திரா பெண் கைது

ஆவடி: ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராஜூ நகர் 11வது தெருவை சேர்ந்தவர் இந்திராணி (65). இவரது மகன் கோபத்தினன் (எ) ஹரி. சோழிங்கநல்லூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர், திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதனால் 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார். அதற்காக பெண் பார்க்கும் படலம் நடந்தது. மேட்ரிமோனியனிலும் பதிவு செய்து பெண் பார்த்து வந்தார். அப்போதுதான், சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் பற்றி ஹரிக்கு தெரியவந்தது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சத்யாவும் ஒப்பு கொண்டார்.

இதைடுத்து, கடந்தாண்டு அக்டோபர் 25ம் தேதி திருநின்றவூரில் திருமணம் நடந்தது. இருவருக்குமே 2வது திருமணம் என்பதால் குறைந்தளவிலேயே உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். திருமண வாழ்க்கை சீராக சென்றது. இந்நிலையில், உங்களது மாத சம்பளத்தை என்னிடம்தான் தர வேண்டும் என்று சத்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ‘உங்களது சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது’ என்று கேட்டுள்ளார். உடனே சொத்து இருக்கும் இடங்களை காட்டியுள்ளார் ஹரி. நாட்கள் செல்ல செல்ல, ‘சொத்துக்களை என் பெயரில் எழுதி வை’ என்று ஹரியை டார்ச்சர் செய்துள்ளார் சத்யா. அப்படி என்றால் ‘உனது ஆதார் கார்டு, கல்விச்சான்றிதழை கொடு’ என்று கேட்டபோது, சத்யா மறுத்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த ஹரி, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சத்யாவை தேடினர். ஆந்திராவுக்கு தலைமறைவாகி விட்டார். அவரை கடந்த 28ம் தேதி அழைத்து வந்து விசாரித்தனர். அப்போதுதான், அவர் ஏற்கனவே ரவி என்பவரை திருமணம் செய்ததும் 2 மகள்கள் இருப்பதும், அந்த மகள்களுக்கும் திருமணமாகி விட்டதும் தெரிந்தது. இதையடுத்து ரவி மற்றும் அவரது மகள்களை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போதுதான், ரூ.10 லட்சம், 10 பவுன் நகைகள் பெற்று கொண்டது தெரிந்தது. மேலும் சுகுணா, சத்யா, சரண்யா என பெயரை மாற்றி மாற்றி ஏமாற்றி பலரை மோசடி செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தது தெரிந்தது. கைதான சத்யாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: