புல்லட் வாங்க மனைவியின் 17 சவரனை திருடிய புதுமாப்பிள்ளை: கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலம்

சென்னை: புல்லட் பைக் வாங்க ஆசைப்பட்டு, மனைவியின் 17 சவரன் நகைகளை திருடி விற்பனை செய்துவிட்டு, நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடிய புதுமாப்பிள்ளை மற்றும் அவரது சகோதரனை போலீசார் கைது செய்தனர். சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் ரஷீத் (27), ஏசி மெக்கானிக். பகுதி நேரமாக ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவருக்கு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது மனைவி கிண்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 25ம் தேதி அப்துல் ரஷீத் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடிந்து, அப்துல் ரஷீத் வீட்டிற்கு முன்னதாக வந்துள்ளார். பிறகு வீட்டிற்கு வந்த மனைவியிடம், யாரோ வீட்டிற்குள் புகுந்து படுக்கையறை கதவை உடைத்து, பீரோவில் இருந்த 17 சவரன் நகைகளை திருடி சென்றதாக கூறி புலம்பியுள்ளார். பிறகு அப்துல் ரஷீத், தனது மனைவியுடன் எழும்பூர் காவல் நிலையத்திற்கு சென்று, நாங்கள் இருவரும் வேலைக்கு சென்ற பிறகு, மர்ம நபர்கள் எங்களது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 17 சவரன் நகைகளை திருடிச் சென்று விட்டதாக புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார், அப்துல் ரஷீத் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த 25ம் தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரும் அந்த பகுதியில் வந்து சென்றதாக பதிவு இல்லை. அதேநேரம், வீட்டில் இருந்து அப்துல் ரஷீத் மற்றும் அவரது மனைவி சென்ற பிறகு அப்துல் ரஷீத் மட்டும் மதியம் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் போலீசாருக்கு அப்துல் ரஷீத் மீது சந்தேகம் எழுந்தது. உடனே அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது, அப்துல் ரஷீத், தனது மனைவியின் 17 சவரன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். எதற்காக திருடினார் என விசாரித்தபோது, நீண்ட நாட்களாக புல்லட் பைக் வாங்க வேண்டும் என்று ஆசை. ஆனால் எனது ஆசை நிறைவேறவில்லை. திருமணத்தின் போது வரதட்சணையாக புல்லட் பைக் வாங்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை. நண்பர்கள் பலர் புல்லட் பைக்குடன் பந்தாவாக செல்வதை பார்த்து, எனக்கும் அந்த பைக் வாங்கியே ஆக வேண்டும், என்று தோன்றியது. ஆனால், அதற்கு பணம் இல்லாததால், மனைவியின் நகைகளை திருடி விற்று புல்லட் வாங்க முடிவு செய்தேன்.

பின்னர், மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றதுபோல் நாடகமாடி, மனைவியை ஏமாற்ற முடிவு செய்தேன். அதன்படி, நகைகளை திருடி, எனது சித்தப்பா மகன் முகமது சாயிடம் கொடுத்து விற்பனை செய்ய சொன்னேன். அதன்படி அவரும் நகைகளை விற்பனை செய்து ரூ2.80 லட்சம் கொடுத்தார். என் மனைவியிடம் புல்லட் வாங்க வேண்டும் என்று பணம் கேட்டால் கொடுக்கமாட்டார். யாரோ வீட்டுக்குள் புகுந்து திருடி சென்றுவிட்டதாக நாடகம் ஆடினால் நம்பி விடுவார் என்று நினைத்தேன். ஆனால் சிசிடிவி பதிவால் நான் மாட்டிக்கொண்டேன் என அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதைதொடர்ந்து அப்துல் ரஷீத் மற்றும் திருட்டுக்கு உதவிய அவரது சித்தப்பா மகன் முகமது சாயிப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். புல்லட் பைக் வாங்க மனைவியின் நகைகளை புதுமாப்பிள்ளை திருடிய சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: