வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேர் கைது: நகை, 3 பைக், 40 செல்போன் பறிமுதல்

திருவொற்றியூர்: மாதவரத்தில் நகை பறிப்பு வழக்கு தொடர்பாக தனிப்படையினரின் விசாரணையை தொடர்ந்து, நேற்று மாலை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 சவரன் நகை, 3 பைக், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (45). இவர், கடந்த 25ம் தேதி வீட்டுவாசலில் நின்றிருந்தபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் 7 சவரன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இப்புகாரின்பேரில் மாதவரம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

 

பின்னர் தனிப்படையினரின் தீவிர விசாரணையை தொடர்ந்து, முதலில் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவகுமார் (30), திருவள்ளூரைச் சேர்ந்த சிபி (25) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, நேற்று மாலை சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த முகமது நியாஸ் (30), செல்வகுமார் (எ) அப்துல்லா (34), ஜமால் (42), சையத் இப்ராகிம் (30) ஆகிய 4 பேரை தனிப்படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.  இவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழிப்பறி கொள்ளை மற்றும் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. மேலும், மாதவரத்தில் கஜலட்சுமியின் தாலி சங்கிலியை பைக்கில் சென்று பறித்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரையும் மாதவரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 சவரன் நகை, 3 பைக், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தனுஷ் (19). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்துவரும் நண்பரை பார்ப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் வழியாக  வந்த போது அங்கு பைக்கில்வந்த 2 பேர், தனுஷை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி  அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த பணம், செல்போனை பறித்துள்ளனர். இதனால் பயந்துபோன தனுஷ், திருடன் திருடன் என்று சத்தம் போட்டதால் வழிப்பறி கொள்ளையர்கள் அவரை கத்தியால் வெட்டிவிட்டு 500 ரூபாய், செல்போனை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர்.

படுகாயம் அடைந்த தனுஷை அப்பகுதியினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.தனுஷ் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவம் நடந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பிரபல கொள்ளையன் கோயம்பேடு பகுதியை சேர்ந்த துரைமுருகன்(22) கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன், பைக், பட்டாகத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் துரைமுருகனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

Related Stories: