பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம்: மீன்வளத்துறை அமைச்சர் தகவல்

பொன்னேரி: பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வளம் மற்றும் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வுசெய்தார். தொடர்ந்து நாட்டு வண்ண அலங்கார மீன்வளர்ப்பு குறித்த கருத்தரங்கில் அமைச்சர் பங்கேற்றார்.மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், மீன்வள ஆராய்ச்சி மையத்தில் வண்ணமீன் வளர்ப்பு குறித்து ஆய்வு நடத்தியுள்ள நிலையில் பண்ணையாளர்களிடம் வளர்ப்பு, லாபம் ஈட்டுவது குறித்தும்   பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைப்பது குறித்தும் வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் அனுமதி பெறாமல் உள்ள இறால் பண்ணைகள் அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் . அனுமதி பெற மறுக்கும் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் விலையில் மீனவர்களுக்கு டீசல் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு சிறிய படகுகள் மானியத்தில் வழங்க ஆய்வு செய்யப்படும். மீனவர்களுக்கு அடையாள அட்டை, மானிய டீசல் வழங்காதது குறித்து மீன்வளத்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பழவேற்காடு மீனவர்கள் வேலைவாய்ப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும் .

மீனவர்களுக்காக பிரத்யேக  கூட்டுறவு வங்கிகள் குறித்து முதலமைச்சர் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்து பணிகள் நடந்து வருவதாகவும், அடுத்த சில மாதங்களில் மீனவர்களுக்காக வங்கிகள் செயல்பட தொடங்கும். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் சில படகுகளில் சோதனை அடிப்படையில் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து படகுகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தி சீர்திருத்த பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், மீன்வளத்துறை கல்லூரி முதல்வர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள்  மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: