ஆபாச படம் வெளியிடுவதாக கானா பாடல் பாடி இளம்பெண்ணுக்கு மிரட்டல் கானா இசையமைப்பாளர் கைது

சென்னை: ஆபாச படத்தை வெளியிடுவேன் என கானா பாடல் பாடியபடியே இளம்பெண்ணை மிரட்டிய கானா இசையமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரவள்ளூரை சேர்ந்த 29 வயது பெண் நேற்று முன்தினம் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், புளியந்தோப்பை சேர்ந்த சபேஷ் சாலமன் (35) என்ற கானா பாடல் இசையமைப்பாளர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் என்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யூ-டியூப்பில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார். மேலும் சபேஷின் தந்தை செல்வகுமாரும் அவருக்கு உடந்தையாக இருந்து எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இதற்கிடையில், கானா பாடல் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் பாதிக்கப்பட்ட பெண்ணை கானா பாடல் பாடியபடியே மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்நிலையில், அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதா குற்றஞ்சாட்டப்பட்ட சபேஷ் சாலமன் மற்றும் அவரது தந்தை செல்வகுமாரிடம் விசாரணை நடத்தினார். அதில் சபேஷ் சாலமன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியது உறுதியானது. இதையடுத்து, சபேஷ் சாலமன் மீது பெண்ணின் மானத்துக்கு குந்தகம் விளைவித்தல், மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: