சொத்து மதிப்பீடுக்காக ரூ.5000 லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை

தேனி: சொத்து மதிப்பீடுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தேனி கோர்ட் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2011ல் தாசில்தாராக இருந்தவர் நாகராஜ் (52). இவரிடம், கண்டமனூர் அருகே ஆத்தாங்கரைபட்டியை சேர்ந்த கொத்தாளமுத்து, தனது மகளுக்கு சொத்து மதிப்பீடு கேட்டு அணுகினார். இதற்கு தாசில்தார் நாகராஜ் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து கொத்தாளமுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் படி 2011, ஜூலை 28ம் தேதி, ரசாயனம் தடவப்பட்ட ரூ.5 ஆயிரத்தை ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் நாகராஜிடம் கொத்தாளமுத்து கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் நாகராஜை கைது செய்தனர். இந்த வழக்கை தேனி மாவட்ட குற்றவியல் கோர்ட் நீதிபதி கோபிநாத் விசாரித்து தாசில்தார் நாகராஜுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: