ராஜபாளையத்தில் அதிகாலை பரபரப்பு ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பசும்பொன் என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர்ஸ் கடை உள்ளது. நேற்றிரவு வியாபாரம் முடிந்த பின், கடையை அடைத்து விட்டு பசும்பொன் மற்றும் பணியாளர்கள் சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பசும்பொன்னின் கடையில் திடீெரென தீப்பிடித்து எரிய துவங்கியது.

கடையிலிருந்து கரும்புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள், இது குறித்து ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலை அதிகாரி ஜெயராமன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டிடத்தின் முகப்பு பகுதி சிறியதாக இருந்ததாலும், கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் கடையின் ஷட்டரை உடைத்து திறக்க முடியவில்லை.

இதனையடுத்து ஜேசிபி மூலம் கடையின் ஷட்டரை உடைத்து, கடைக்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணத்தால் தீ பற்றியதா என ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: