பழைய பொருளை குறைந்த விலைக்கு தர மறுத்த காயலான் கடை ஊழியரை சரமாரி தாக்கிய 3 பேர் கைது

அண்ணாநகர்: திருமங்கலத்தில் பழைய பொருட்களை குறைந்த விலைக்கு தர மறுத்த காயலான் கடை ஊழியரை சரமாரி தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த மாங்காடு அருகே பரணிபுத்தூர், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (35). இவர், சென்னை திருமங்கலம், 11வது பிரதான சாலையில் ஒரு காயலான் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் திருமங்கலம், மடுவங்கரையை சேர்ந்த பிரவீன் (35) என்பவர் காயலான் கடைக்கு வந்துள்ளார். பின்னர் விஜயகுமாரிடம் பழைய பொருட்களை குறைந்த விலைக்கு தரும்படி பிரவீன் வலியுறுத்தியுள்ளார். அவர் தர மறுக்கவே, திருட்டு பொருட்களை விற்கிறாயா, உன்னை போலீசில் பிடித்து கொடுத்துவிடுவேன் என விஜயகுமாரை மிரட்டிவிட்டு பிரவீன் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று மதியம் காயலான் கடைக்கு பிரவீன், தனது நண்பர்கள் கமல் (33), கார்த்திக் (34) ஆகியோருடன் வந்துள்ளார். அங்கிருந்த விஜயகுமாரிடம் அவதூறாக பேசி, அவரை 3 பேரும் சரமாரி தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் பிரவீன் உள்பட 3 பேரும் தப்பி சென்றனர்.

படுகாயம் அடைந்த விஜயகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இப்புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் விசாரித்தனர். பின்னர் காயலான் கடை ஊழியரை தாக்கிவிட்டு தலைமறைவான பிரவீன் உள்பட 3 பேரையும் நேற்றிரவு கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் 3 பேரும் நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்தனர்.

Related Stories: