முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரே திறந்து கிடக்கும் கழிவுநீர் வடிகால் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி-மூடி அமைக்க கோரிக்கை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரே சாலையோரம் கழிவுநீர் வடிகால் திறந்து கிடப்பதால் மூடி அமைக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள வடிகாலை மீட்டு தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அரசு மருத்துவமனை, புதுத்தெரு அரசு பள்ளி, காவல் நிலையம் ஆகியவைகளின் எதிரே திறந்தவெளி கழிவுநீர் வடிகால் ஒன்று உள்ளது. இந்த வடிகால் மருத்துவமனைதெரு தொடங்கி இவ்வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் சென்று கோரையாற்றில் கலக்கிறது.

இந்த வடிகால் ஒரு பகுதி திறந்த நிலையிலும், மற்றொரு பகுதி வடிகால் மூடி அமைத்து தனியார் ஆக்கிரமிப்பிலும் உள்ளது. இதன்அருகே தான் மன்னார்குடி செல்லும் பயணிகள் நின்று பேருந்து ஏறி செல்வது வழக்கம். அதேபோல் இதன் அருகே உள்ள அரசு பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் வழியாகதான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர்.

அதேபோல் காவல்நிலையம், தனியார் மற்றும் அரசு மருத்துவமனை, அதேபோல் பல்வேறு அலுவலகங்களுக்கும், இப்பகுதி கடைத்தெருவிற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் திறந்த நிலையில் உள்ள இந்த கழிவுநீர் வடிகாலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி தூய்மைபடுத்தாததால் எந்த நேரமும் அசுத்தமாக துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் மருத்துவமனை எதிரே வடிகால் திறந்த நிலையில் உள்ளதால் நோயாளிகள், பயணிகள் பொதுமக்கள் பலர் தினந்தோறும் தடுமாறி விழுகின்றனர்.

கடந்த ஆண்டு அதிமுக அரசு இதனை கண்டுக்கொள்ளவில்லை. அதனால் இந்த கழிவுநீர் வடிகாலுக்கு மூடி அமைத்து தரவேண்டும் என்றும், அதனை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் அப்பகுதியில் சாலையோர மினி பூங்கா அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள மற்ற பகுதி கழிவுநீர் வடிகாலையும் மீட்டு சுத்தம் செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: