மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி ஷிண்டேயுடன் பாஜ பேச்சுவார்த்தை: அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒன்றிய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்களுடன் இணைந்து பாஜ ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஷிண்டே தலைமையில் கவுகாத்தியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 15 பேருக்கு, ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இவர்கள் கவுகாத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் முகாமிட்டுள்ளனர். தன்னுடன் சிவசேனா எம்எல்ஏ.க்கள் 42 பேர் உட்பட 50 எம்எல்ஏ.க்கள் இருப்பதாக ஷிண்டே கூறி வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடனான மகா விகாஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜவுடன் சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே, அதிருப்தி எம்எல்ஏக்களின் நிபந்தனையாக உள்ளது.

ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 16 பேரின் பதவியை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பறிப்பது தொடர்பாக துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷிண்டே தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இது இன்று காலை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஷிண்டே அணியுடன் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக, குஜராத் மாநிலம். வதோதராவில் ஷிண்டேவும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரான பட்நவிசும் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ.க்கள் 15 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கவும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று திடீரென உத்தரவிட்டது. மகாராஷ்டிராவில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ.க்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி மாநில போலீசாருக்கு ஆளுநர் கோஷ்யாரியும் உத்தரவிட்டு இருக்கிறார். இதன்மூலம், ஷிண்டேவின் பின்னணியில் பாஜ. இருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஷிண்டே அணியில் மற்றொரு அமைச்சர்

மகாராஷ்டிரா உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் உதய் சாமந்தும், ஷிண்டே அணியில் நேற்று சேர்ந்தார். மும்பையில் இருந்து சூரத் சென்ற அவர் அங்கிருந்து தனி விமானத்தில் கவுகாத்தி சென்று ஷிண்டே அணியில் சேர்ந்தார். இவருடன் சேர்த்து ஷிண்டே அணியில் இதுவரையில் 9 அமைச்சர்கள் சேர்ந்துள்ளனர்.

Related Stories: