தனியார் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி: இருவர் கைது

சென்னை: தனியர் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த விவேக்குமார் (24). இவர்  ஏற்கனவே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அறிமுகமான நண்பர் மணிகண்டன் என்பவர் சமீபத்தில் விவேக்குமாரை தொடர்பு கொண்டு, தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், இங்கு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், மாதந்தோறும் அதிகளவு பணம் கிடைக்கும் என கூறியுள்ளார்.இதை நம்பி விவேக்குமார் ₹3 லட்சம் செலுத்தியதாகவும், ஆனால் கடந்த 2 மாதங்களாக எந்த பணமும் திரும்ப தரவில்லை என்றும், பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டியதாகவும், விவேக்குமார் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், விவேக்குமார் அவரது நண்பர் மணிகண்டன் என்பவர் கூறியதை நம்பி சென்னைக்கு வந்து எழும்பூர் ரயில் நிலையம் அருகே மணிகண்டன்,  சிவநேசன், அன்புமணி மற்றும் காளிதாஸ் ஆகியோரை சந்தித்ததும், அவர்கள் கூறியதை நம்பி விவேக்குமார் கடந்த ஏப்ரல் மாதம் ₹3 லட்சத்தை சிவநேசன் வங்கி கணக்கில் 2 தவணைகளாக செலுத்தியதும், அதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக எந்த பணத்தையும் தரவில்லை என்றும், இது பற்றி விவேக்குமார் மணிகண்டனிடம் நேரில் சென்று கேட்டபோது, மணிகண்டன் பணத்தை தராமல் மிரட்டியதும் தெரியவந்தது.

அதன்பேரில், எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து,  மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன் (24), மற்றும் அவரது நண்பரான  மணிகண்டன் (29) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 2 இருசக்கர வாகனங்கள், 2 ஐபோன்கள், 1 ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ₹10,000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில்  கடந்த 3 வருடங்களாக இது போல பல இளைஞர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.மேலும், தலைமறைவாக உள்ள சிவநேசன், அன்புமணி மற்றும் காளிதாஸ் ஆகியோரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: