கர்நாடக மாநிலம் கல்புர்கியில் கோயில் பெயரில் மோசடி: 5 அர்ச்சகர்கள் மீது வழக்கு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலின் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி பலகோடி ரூபாய் மோசடி செய்த 5 அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டம் கனகபுரா என்ற இடத்தில் அமைந்துள்ளது தத்தாத்திரயா கோயில். அரசின் கட்டுப்பாட்டின் உள்ள இந்த கோவிலின் பெயரில் பல இணையதளங்கள் இருப்பது தொடர்பாக கல்புர்கி மாவட்ட ஆட்சியர் யஷ்வந்த் குருகரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவிலுக்கு நேரில் சென்று ஆட்சியர் விசாரணை நடத்தினார். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கு கோயில் அர்ச்சகர்களாக பணியாற்றும் 5 பேர் மற்றும் அவர்களின் மகள்கள் இணைந்து இந்த இணையதளங்களை தொங்கியது தெரியவந்தது. இந்த இணையதளங்களில் கோவிலுக்கு நன்கொடை கேட்டு அவர்கள் விளம்பரம் கொடுத்து வந்துள்ளனர். மேலும் சிறப்பு பூஜைகள் செய்வதாகவும் அவர்கள் நிதி திரட்டி உள்ளனர். ஆறு ஆண்டுகளாக கோவிலின் பெயரில் பல இணையதளங்கள் தொடங்கி, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களிடம் இருந்து அவர்கள் நிதி திரட்டி உள்ளனர். சுமார் 28 ஆயிரம் பேர் இவர்களுக்கு நிதி வழங்கி உள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 5 அர்ச்சகர்கள் மீது கனகபுரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அர்ச்சகர்களின் வாங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றும் கல்புர்கி மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Related Stories: