கோயில் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது

ஸ்ரீபெரும்புதூர்:  சுங்குவார்சத்திரம் அருகே துலசாபுரம் ஊராட்சி கிராம கோயில் சிலைகளை சேதப்படுத்திய வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே துலசாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவாக்கம் கிராமத்தில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது. இங்கு விநாயகர், நவக்கிரக சிலைகளை கடந்த 20ம் தேதி இரவு மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். மேலும், அதே பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி அம்மன் கோயில் பிரகாரத்தின் வெளியே இருந்த அம்மன் சிலையின் கைப்பகுதியை மர்ம நபர்கள் சேதப்படுத்தியிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கோயில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, இடையர்பாக்கம் - பிச்சிவாக்கம் சாலையில் அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை சுங்குவார்சத்திரம் போலீசார் சமசரப்படுத்தி அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில், சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த துளசி (எ) சதீஷ் பிரேம்குமார் என்ற வாலிபர் கோயில் சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் சாமி சிலைகளை சேதப்படுத்திய சதீஷ் பிரேம்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் குடிபோதையில் சாமி சிலைகளை உடைத்ததாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

Related Stories: