ஆனைகட்டி அருகே மான்கறி சமைத்து சாப்பிட்ட 6 பேருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

பெ.நா.பாளையம்: ஆனைகட்டி அருகே மான்கறி சமைத்து சாப்பிட்ட 6 பேருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கோவை வனச்சரகம் ஆனைகட்டி மத்திய சுற்று எல்லைக்குட்பட்ட மூங்கில்பள்ளம் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகில் ஒருவர் மான் கறியை வீட்டில் வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு இருந்த மூங்கில்பள்ளத்தை சேர்ந்த ரங்கசாமி(65) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், ‘கங்கா கால்வாய் அருகில் காப்பு காட்டிற்கு வெளியே உள்ள ஓடையில் நாயால் கடிக்கபட்டு புள்ளி மான் ஒன்று இறந்தது. அதன் கறியை என் வீட்டில் வெட்டி அருகிலுள்ள பாபு(40), சுப்ரமணி(45), ராமு(30), சிவதாஸ்(37),கந்தசாமி (81) ஆகியோருக்கும் வழங்கினேன்,’ என்றார். பின்னர் ரங்கசாமியை மானை வெட்டிய இடத்திற்கு அழைத்து சென்ற வனத்துறையினர் அங்கு கொம்புடன் கூடிய தலை தோல் ஆகியவற்றை கைப்பற்றினர்.

கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில் வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு புள்ளிமானை வெட்டி சமைத்த குற்றத்திற்காக 6 பேருக்கும் தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: