ரயில் பயணியின் சட்டையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்; மிரண்டு போன அதிகாரிகள்!

சென்னை: ரயில் நிலையத்தில் சட்டை மற்றும் பைக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட 61 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை விரைவு ரயில் வந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி மாவட்டத்தைச் சேர்ந்த அகுலா சாய்கிருஷ்ணா (27) என்பவரின் பை மற்றும் சட்டையை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். பையில் ரூ. 42 லட்சம் மற்றும் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.19 லட்சம் என மொத்தம் ரூ. 61 லட்சம் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதததால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பணத்தை கைப்பற்றினர்.

மேலும் சாய்கிருஷ்ணா ராஜமுந்திரி பகுதியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு பயணம் செய்வதாகவும், ஆனால் அவர் விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு டிக்கெட் எடுத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பிடிபட்ட சாய் கிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையில், நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாகவும், பணத்தை கொண்டு வந்து சென்னையில் ஒப்படைத்தால் 10 ஆயிரம் ரூபாய் கமிஷனாக கிடைக்கும் என விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 61 லட்சம் பணம் மற்றும் சாய் கிருஷ்ணாவை வருமானவரித் துறையினரிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே பாதுகாப்பு படை டி.எஸ்.பி ராஜூ கூறுகையில் ரயிலில் ஹவாலா பணம் மற்றும் மதுபானங்களை கடத்தி வருவோரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கணக்கில் வராத ரூ.1 கோடியே 85 லட்சம் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: