ரூ.6 லட்சம் மோசடி பணத்தை கேட்டால் அடியாட்கள் வைத்து மதுவந்தி தாக்குகிறார்: கோயில் பூசாரி பரபரப்பு புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையை சேர்ந்த கோயில் பூசாரி  கிருஷ்ணபிரசாத் (29) நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள ஆனந்த சீனிவாச பெருமாள் கோயிலை நிர்வகித்து வருகிறேன். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் மதுவந்தி நட்பாக பழகி வந்தார். அப்போது, நான் பிஎஸ்பிபி பள்ளியை நிர்வகித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் உங்கள் குழந்தைகளுக்கு சீட் தருகிறேன் என சங்கரன், முகமது இசாக், பரத்குமார், கனகராஜ், ராஜா, வடிவேல், மாரியப்பன் ஆகியோரிடம் மொத்தம் ரூ.19.85 லட்சம் வாங்கினார். ஆனால் யாருக்கும் சீட் வாங்கி தரவில்லை.

இதுதொடர்பாக என்னிடம் பெற்றோர் கூறினர். நான் அவரிடம் கேட்ட போது, பணத்தை தருவதாக உறுதியளித்தார். பிறகு பணத்தை கொடுப்பதாக ஜிஎன் செட்டி சாலையில் உள்ள ஜீவா பூங்காவுக்கு மதுவந்தி அழைத்தார். நான் அங்கு சென்ற போது, பல அடியாட்களுடன் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி என்னை அடித்தார். இதுதொடர்பாக பாண்டி பஜார் காவல் நியைத்தில் புகார் அளித்தேன். போலீசார் மதுவந்தி மீது நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் துண்டு துண்டாக வெட்டி உன் ஜாதிக்காரா முன்னாடியே போட்டுவிடுவேன், ஆழ்வார்பேட்டையில் நான் பணம் கொடுத்த இடத்திலேயே உதைத்து கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். எனவே புகாரின் மீது தக்க நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: