கோவையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் தொழிலதிபரிடம் ஹவாலா பணமா? காரை மறித்து கொள்ளை முயற்சி: ஆயுதங்களுடன் தாக்கிய ராணுவ வீரர் உட்பட 4 பேரிடம் விசாரணை

மதுக்கரை: ஹவாலா பணத்துடன் வருவதாக நினைத்து கேரள தொழிலதிபர் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர் உட்பட 4 பேர், வீடியோ பதிவு வெளியானதால் பிடிபட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. கேரளா மாநிலம் கொச்சின் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (27). இவர், கொச்சியில் விளம்பர ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு 11 மணிக்கு பெங்களூரு சென்று கம்ப்யூட்டர் வாங்கி கொண்டு சார்லஸ் உள்ளிட்ட நான்கு நண்பர்களுடன் காரில் 13ம் தேதி மாலை கேரளாவிற்கு கிளம்பினார்.

அப்போது, அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து செல்வதற்காக பெங்களூரு வந்துள்ளார் என்று நினைத்த கேரளாவை சேர்ந்த ஒரு கும்பல், பெங்களூருவில் இருந்து 3 காரில் அவரை பின் தொடர்ந்துள்ளனர். கோவை வழியாக கேரளா செல்வதற்காக மதுக்கரை எல் அன்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை அருகே வந்தபோது, அந்த கும்பல், காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது.

சுதாரித்துக் கொண்ட அஸ்லாம் சித்திக் காரை வேகமாக ஓட்டி அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு சென்றார். சித்திக்கை துரத்தி வந்த கும்பல், சுங்கச்சாவடியில் ரோந்து பணியில் போலீசார் இருப்பதைக் கண்ட கும்பல் தப்பியது. இதையடுத்து அஸ்லாம் சித்திக் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளையடிக்க முயன்ற கும்பல் அருகில் இருந்த சோதனைச்சாவடியில் சிக்கியது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிப்பட்டவர்கள், கேரள மாநிலத்தை சேர்ந்த சிவதாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) ஆகியோர் என்பதும், சிவதாஸ் மற்றும் அஜய்குமார் தனியார் நிறுவனத்தில் டிரைவராக இருப்பதும், விஷ்ணு ராணுவ வீரர் என்றும் தெரியவந்தது. கடந்த ஏப்ரல் மாதம் சொந்த ஊருக்கு வந்த விஷ்ணு மீண்டும் பணிக்கு செல்லவில்லை. கோவை வழியாக வரும் ஹவாலா பணத்தை கொள்ளையடித்தால் யாரும் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கேரளாவில் செயல்பட்டு வரும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், கேரளாவில் இருந்து பெங்களூருக்கு சென்று ஹவாலா பணம் எடுத்து வரும் கார்களை தாக்கி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி ஒரு குழு மூலம் அஸ்லாம் சித்திக் பெங்களூருக்கு ஹவாலா பணத்தை எடுத்து வந்திருக்கிறார் என்கிற ரகசிய தகவல் இந்த குழுவினருக்கு கிடைத்துள்ளது. மேலும், அந்த குழுவினர் அஸ்லாம் சித்திக்கின் காரை பின் தொடர்ந்து தாக்கி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்குமாறு கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்தே இவர்கள் இச்சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். கைது செய்யப்பட்ட விஷ்ணு ராணுவ வீரர் என்பதால் அவர் எதற்காக ராணுவத்தில் இருந்து விடுப்பு எடுத்து வந்தார். விடுப்பில் வந்த அவர் எங்கெங்கு சென்றார். யாருடன் தொடர்பு வைத்துள்ளார். வேறு எங்காவது நடந்த வழிப்பறியில் இவருக்கு தொடர்புள்ளதா?, அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து வர போகிறார் என்கிற தகவலை இவருக்கு சொன்னது யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலங்கள் மற்றும் சினிமாவில் வருவதுபோல் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கோவையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் தொழிலதிபரிடம் ஹவாலா பணமா? காரை மறித்து கொள்ளை முயற்சி: ஆயுதங்களுடன் தாக்கிய ராணுவ வீரர் உட்பட 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: