மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்ப்பு 13 சிவசேனா எம்எல்ஏ.க்கள் ஓட்டம்?: கூட்டணி ஆட்சி கவிழும் அபாயம்

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இக்கட்சியை சேர்ந்த 13 அதிருப்தி எம்எல்ஏ.க்கள்பாஜ ஆட்சி நடக்கும் குஜராத்துக்கு சென்று, சூரத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் அம்மாநில போலீசின் பாதுகாப்புடன் தங்கியுள்ளனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா - பாஜ கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்ற மோதலில், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதன்பிறகு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து சிவசேனா தலைமையில் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி ஆட்சி அமைத்தது.சமீபத்தில் நடந்த சட்ட மேலவை (எம்எல்சி) தேர்தலில் பாஜ வேட்பாளர் வெற்றி பெற, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தனர்.

இந்நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே திடீரென மாயமானார். அவருடன் இக்கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேரும் உள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் பாஜ ஆட்சி நடக்கும் குஜராத்தில் உள்ள சூரத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அம்மாநில போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். மேலும், அங்கிருந்து முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் போனில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, ‘காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, பாஜவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும்’ என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மும்பையில் உத்தவ் தாக்கரே தலைமையில் முக்கிய கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 144 எம்எல்ஏ.க்கள் ஆதரவு தேவை. தற்போது, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அவர் உட்பட 14 எம்எல்ஏ.க்கள் ஓடி விட்டதால், உத்தவ்  தாக்கரேவின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஷிண்டேவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சூரத்துக்கு சிவசேனா முக்கிய தலைவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், இது பற்றி கருத்து கூறிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ‘இது சிவசேனாவின் உட்கட்சி பிரச்னை,’ என்று தெரிவித்துள்ளார்.

சிறிய கட்சிகள், சுேயச்சை எம்எல்ஏ.க்களுக்கு கிராக்கி

மகாராஷ்டிராவில் சிறிய கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ.க்களும், சுயேச்சை எம்எல்ஏ.க்களும் 29 பேர் உள்ளனர். சிவசேனாவின் 13 அதிருப்தி எம்எல்ஏ.க்கள் பிடிவாதமாக இருந்தால், இந்த 29 எம்எல்ஏ.க்களின் ஆதரவு சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு முக்கியமாக தேவைப்படும். இதனால் இவர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

ஷிண்டே பதவி பறிப்பு

சட்டப்பேரவையில் சிவசேனா எம்எல்ஏ.க்கள் குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே இருந்து வந்தார். அவரின் இந்த பதவியை உத்தவ் நேற்று பறித்தார். அவருக்கு பதிலாக அந்த பதவியில் அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: